Yuvan Shankar Raja's recent Anandha Vikatan Interview! :)
“இப்போ நிம்மதியா இருக்கேன் !”
ஒரு வருஷமா ஆழ்நிலை தியானம் மாதிரியான ஒரு அமைதி மனநிலையில் இருந்தேன். இதுவரையிலான என் பயணத்தை நானே திரும்பிப் பார்த்துட்டு இருந்தேன். அதான் கொஞ்சம் இடைவெளி!” – வாஞ்சையாகச் சிரிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் சர்ச்சைகளின் ராஜாவாக இருந்தவரிடம், இப்போது முன் எப்போதும் இல்லாத தீர்க்கம்!
”18 வருஷங்களில் 100 படங்கள் தாண்டிட்டேன். என்ன பண்ணியிருக்கேன்னு யோசிச்சா… நான் ஒரு இசையமைப்பாளர். இறைவன் இந்த இசையை எனக்குக் கொடுக்கிறான். அதை நான் மக்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!
ம்ம்ம்… நான் எதுக்கு இந்தப் பூமிக்கு வந்திருக்கேன்… இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன… இதான் இப்போ என் தேடல். இசை, சினிமா, புகழ் வெளிச்சம்னு இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியலை. நான் இசையமைக்கும்போது சில டியூன்ஸ் எப்படி வருதுன்னே எனக்கு இன்னமும் தெரியலை. ‘இதெல்லாம் எங்கே இருந்து வருது… எப்படி வருது?’னு அடிக்கடி மனதில் தோணும் கேள்விகளுக்கு, ஆன்மிகத்தில்தான் பதில் கிடைச்சது. என் தேடலும் ஆன்மிகத்தில்தான்!”
‘ ‘எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’னு சொல்வாங்க. அப்படி இருக்கையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாற தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கா?’
”நிறையக் காரணங்கள் இருக்கு.
வீட்டில் நான் செல்லப்பிள்ளை. என் அண்ணனை, பியானோ கிளாஸுக்கு அனுப்பினாங்க. தங்கச்சியை, பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. ஆனா என்னை, எந்த கிளாஸுக்கும் அனுப்பாம ஃப்ரீயா விட்டுட்டாங்க அம்மா. எனக்கு எல்லாமே அம்மாதான். ‘இன்னும் நிறையப் படம் பண்ணு.. இன்னும் நிறைய ஹிட்ஸ் கொடு’னு உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க அம்மா. எனக்கு மியூசிக் தெரியாது. மியூசிக் படிக்கலை. ஆனா, எப்படி 100 படங்களுக்கு இசையமைக்க முடிஞ்சது? அம்மாவின் அன்பும் அவங்க கொடுத்த ஊக்கமும்தான் காரணம். அதோடு இறைவனின் அருளும் இருக்கு. அப்படி எனக்கு எல்லாமுமா இருந்த அவங்க இறந்ததும், என் வாழ்க்கையே வேற மாதிரி மாறிடுச்சு.
என் அம்மா ஜீவா இறந்த சமயம், நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். அவங்க மறைவு எனக்குள் ஒரு பெரிய வெறுமையை உண்டாக்கிருச்சு. அவங்க இல்லாம நான் என்ன ஆகப்போறேன்னு பயம் வந்தது. இனி யார் என்னைப் பார்த்துக்குவாங்க… அடுத்து என் வாழ்க்கையில் என்ன… எல்லாமே குழப்பமா இருந்தது. அப்பதான் குர்ஆன் படிக்க ஆரம்பிச்சேன். குர்ஆன் படிக்கப் படிக்க, என் தேடலுக்குப் பதில் கிடைச்சது. அது கொடுத்த எனர்ஜிதான் என்னை மீட்டுக் கொண்டுவர உதவுச்சு. அப்படியே இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிட்டேன்.
யுவன் ஷங்கர் ராஜான்னு ஒருத்தன் இங்கே இருக்கான்னா, அதுக்கு முழுக் காரணம் என் அம்மா மட்டும்தான். அதுவரை நான் மது அப்படிக் குடிச்சதே இல்லை. ஆனா, அம்மா இறந்த சமயம் மூணு, நாலு மாசம் தொடர்ந்து குடிச்சுட்டே இருந்தேன். ஸ்மோக் பண்ணவும் ஆரம்பிச்சேன். அப்ப ஒரு சந்தர்ப்பத்துல, ‘இவன் யுவன் இல்லை’னு என்னால உணர முடிஞ்சது. இப்படியே போயிட்டு இருந்தா, சம்பாதிச்ச பேர், பணம், அடையாளம் எல்லாமே என்னைவிட்டுப் போயிடும்னு உணர்ந்து, அதுல இருந்து மீண்டு வந்தேன். என்னை மீட்டுக் கொடுத்தது இஸ்லாம். எனக்கு இஸ்லாம் கை கொடுத்தது. நான் அதுக்கு என் மனசைக் கொடுத்தேன்!”
”திருமண வாழ்க்கை எப்படி இருக்கு… காதல் கல்யாணமா?”
”மாஷா அல்லாஹ்… நல்லா இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஆனா, இது காதல் திருமணம் இல்லைங்க. நண்பர்கள் பலரிடம் ‘இந்த மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க’னு கேட்டிருந்தேன். அப்படி ஒரு நண்பர் மூலம்தான் ஜெஃப்ருனிஸா குடும்பம் அறிமுகமானாங்க. ரெண்டு குடும்பமும் அறிமுகமாகி பரஸ்பரம் ஒண்ணாப் பேசி நடத்திய திருமணம் இது. ஆனா, திருமணப் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருந்தப்பவே, ‘யுவனுக்கு, மூன்றாவது கல்யாணம்; ரகசியத் திருமணம்’னு வதந்தி கிளம்பிடுச்சு. இந்த விஷயங்கள் என் பெர்சனல்னு நான் நினைக்கிறேன். ஆனா, ஒரு பிரபலத்துக்கு பெர்சனல்னு எதுவும் இல்லைனு மத்தவங்க நினைக் கிறாங்கனு நான் சமாதானப்படுத்திக் கிட்டேன். ஆனா அந்தச் சூழ்நிலை, பொண்ணு வீட்டுல நிர்பந்தத்தை உண்டாக்கிருச்சு. எனக்காக அவங்க ஏன் சங்கடப்படணும்னு தோணுச்சு. தள்ளிப்போடாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அப்பாகிட்ட பேசினேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. இப்போ சந்தோஷமா இருக்கோம்!”
‘கல்யாணத்துக்கு, அப்பா என்ன சொன்னார்?’
”கல்யாணம் பத்திச் சொன்னதும் வாழ்த்தினார். ‘இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம் வைச்சுக்கலாம்’னு சொன்னதும், ‘என்னது… இன்னும் ரெண்டு நாள்லயா? உடனே எப்படி வர முடியும்?’னு யோசிச்சார். அப்புறம் அவரே, ‘சரி, நீங்களே கல்யாணம் பண்ணிட்டு வந்துடுங்க’னு சொல்லிட்டார். அப்பா சம்மதத்தோடுதான் எங்க கல்யாணம் நடந்தது!”
‘ ‘இடம் பொருள் ஏவல்’ படத்துக்காக முதல்முறையாக வைரமுத்துடன் இணைந்து வேலைபார்க்கும் அனுபவம் எப்படி இருந்தது?’
”நான் முதலில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்துக்கே வைரமுத்து சார்கிட்ட கேட்டேன். ‘இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும் தம்பி’னு சொன்னார். இப்பத்தான் நாங்க சேரணும்னு எழுதியிருக்கு. ‘இடம் பொருள் ஏவல்’ படத்துக்கு நான் முதல்ல டியூன்ஸ் கொடுத்துட்டேன். அதைக் கேட்டுதான் வைரமுத்து சார் பாடல்கள் எழுதினார். பிரமாதமான வார்த்தைகள். அப்பாவுடன் அந்தக் காலத்துல வேலைபார்த்த அனுபவங்களைச் சொன்னார். ஆச்சர்யமா இருந்தது!”
‘இசையமைப்பாளர்கள், ஹீரோவா நடிக்கிறாங்களே… நீங்கதான் அப்படி முதல் ஆளா நடிப்பீங்கனு எதிர்பார்த்தோம். இப்பவும் அந்த ஆசை இருக்கா?”
”எனக்கும் நடிக்கிற ஆசை இருந்தது. அம்மா என்னை நடிக்கச் சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ எனக்கு டைம் இல்ல. இப்பவும் அதே காரணம்தான். வரிசையா நிறையப் படங்கள். ஆனா, மியூசிக் ஆல்பம், ஸ்டேஜ் ஷோக்கள் பண்ணணும்னு ப்ளான். நடிக்கிற ஆசை அப்படியேதான் இருக்கு. பார்ப்போம்!’
‘ ‘மாஸ்’ படத்தில் இருந்து நீங்க விலகிட்டதா ஒரு தகவல்… அப்புறம் அதை மறுத்தார் வெங்கட் பிரபு. என்னதான் நடந்தது?”
”எதுவுமே நடக்கலைங்க. ஒரு இந்திப் பாடலின் ரைட்ஸ் வாங்கி இருந்தாங்க. ஆனா, குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பாட்டுக்கு என்னால் இசையமைக்க முடியலை. அந்தச் சமயத்துல தமனை வெச்சு அந்தப் பாட்டை ரீமிக்ஸ் பண்ணாங்க. அவ்வளவுதான்!”
‘ ‘யுவன் நல்லா மியூசிக் பண்ணுவார். ஆனா, ரொம்ப தாமதப்படுத்துறார்’னு ஒரு பேச்சு இருக்கே!”
சின்ன மௌனத்துக்குப் பின்… ”என்னைக் கட்டாயப்படுத்திக்கிட்டு வேலைசெய்ய எனக்குப் பிடிக்காது. நான் இசையமைச்ச 100 படங்களில் ஹிப்ஹாப், மெலடி, கிளாஸிக், குத்து, அது… இதுனு புதுசு புதுசா நிறைய முயற்சிகள் பண்ணியிருக்கேன். ‘மாஸ்’ கம்போஸிங்ல வெங்கட் பிரபுகிட்ட, ‘எந்த மாதிரி ஸ்டைல் வேணும்?’னு கேட்டேன். ‘உன்கிட்ட என்னப்பா கேட்க முடியும்? எல்லா ஜானரும் பண்ணிட்டியே… இன்னும் புதுசா புடி’ன்னார். அதுதான் பிரச்னை. இன்னும் புதுசு…. இன்னும் புதுசுனு யோசிக்கிறப்போ, அந்தச் சவால் பெருசா இருக்கு. அதுதான் நிறைய நேரம் எடுத்துக்குது. அது சிலருக்குப் பிடிக்காமல் எரிச்சலாகிறாங்க; என்னைப் புரிஞ்சுக்கிட்ட இயக்குநர்கள் எனக்குச் சுதந்திரம் கொடுக்கிறாங்க. புதுசா வர்றவங்களும் புரிஞ்சுப்பாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு!”